செய்திகள்
கொலை செய்யப்பட்ட பூங்கொடி. கைதான குருநாதன்.

வெள்ளகோவிலில் மனைவியை கொன்ற தொழிலாளி கைது

Published On 2021-11-27 09:09 GMT   |   Update On 2021-11-27 09:09 GMT
பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 62). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு சாந்தி, ரேவதி என்ற 2 மகள்கள், விநாயகன் என்ற மகன் உள்ளனர்.   

ரேவதி கடந்த 2019-ம் ஆண்டு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். குருநாதன் உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென பூங்கொடியின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. 

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது குருநாதன் கடப்பாரையால் பூங்கொடியின் பின் தலையில் அடித்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பூங்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குருநாதன் மனைவியை எதற்காக கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி தப்பி ஓடிய குருநாதனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்ராயன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்த குருநாதனை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை காங்கயம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.  
Tags:    

Similar News