செய்திகள்
கோப்புபடம்

இணையதளத்தில் மாணவர்களின் விபரங்கள் அழிப்பு - ஆசிரியர்கள் பரபரப்பு புகார்

Published On 2021-11-27 07:21 GMT   |   Update On 2021-11-27 07:21 GMT
வேறு பள்ளிகளில் பயில்வதற்காக மாற்றுச்சான்றிதழ் கோரினால் மாணவர்களின் ‘எமிஸ்’ பதிவில் இருந்து பள்ளியின் குறியீடு நீக்கப்படும்.
திருப்பூர்:

தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக ஒரு ‘எமிஸ்’ எண் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப்பதிவும், இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவ்வகையில் எவரேனும், வேறு பள்ளிகளில் பயில்வதற்காக மாற்றுச்சான்றிதழ் கோரினால் மாணவர்களின் ‘எமிஸ்’ பதிவில் இருந்து பள்ளியின் குறியீடு நீக்கப்படும். பின் அதன் நகலுடன் இணைத்து மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும்.

சேர்க்கையின் போது புதிய பள்ளியின் குறியீடு ‘எமிஸ்’ எண்ணில் பதிவேற்றம் செய்யப்படும். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் ‘எமிஸ்’ எண்ணில் அதிகப்படியான விபரங்கள் அழிக்கப்பட்டும், தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

கொரோனா ஊரடங்கில் பொருளாதார ரீதியாக பலரும் பாதிக்கப்பட்டனர். அப்போது பெற்றோர் பலரும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று அரசு பள்ளியில் சேர்த்தனர். அப்போது சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் எமிஸ் எண்ணில் பல விபரங்களை அழித்தும், விபரங்களைத் தவறாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள் அனைத்தும் தவறாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளை தொடர்பு கொண்டு மாணவர்களின் விபரங்களை கேட்டறிய வேண்டியுள்ளது. அதற்கு சரியான பதிலும் கிடைப்பதில்லை. துறை ரீதியான உயரதிகாரிகள் இது குறித்து ஆய்வு நடத்துவது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News