செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

அம்மா உணவகம் பெயரை இருட்டடிப்பு செய்ய அரசு முயற்சி- ஓ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2021-11-26 11:05 GMT   |   Update On 2021-11-26 11:05 GMT
நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியது 'அம்மா உணவகம்' என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள், படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில் அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. 

ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படவேண்டும். 

எனவே, இதில் முதல்வர் உடனடியாக தலையிட்டு புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்  'அம்மா உணவகம்' என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம்  கூறி உள்ளார்.

Tags:    

Similar News