செய்திகள்
மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

நூல் விலையை கட்டுப்படுத்த கோரி கலெக்டரிடம் விசைத்தறியாளர்கள் மனு

Published On 2021-11-26 10:03 GMT   |   Update On 2021-11-26 10:03 GMT
தீரன் தொழிற்சங்க பேரவையை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் ஏற்றப்பட்ட நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் போலவே விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய தீரன் தொழிற்சங்க பேரவையை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்கு நாடு மக்கள் தேசிய காட்சி மற்றும் தீரன் தொழிற்சங்க பேரவை சார்பில் மாவட்ட கலெக்டரிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மனுஅளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது:

பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசு ஜவுளி தொழிலில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க தனி இலாகா அமைக்க வேண்டும். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு 24.11.2021ந்தேதியில் ஏற்பட்டுள்ள 20 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை உடனே நடைமுறைப்படுத்த கலெக்டர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
 
கூலிக்கு நெசவு செய்யும் நாடா இல்லா சூல்ஜர் தறிக்கும் விசைத்தறிக்கு வழங்கிய 20 சதவீத கூலி உயர்வைவழங்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து  நடைமுறைப்படுத்த வேண்டும். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி மற்றும் சூல்சர் தறிகளுக்கு வருடத்திற்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். 

மத்திய அரசு உள்நாட்டு தேவைக்கேற்ப பஞ்சு, நூல் கழிவு பஞ்சு போன்ற பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். உள்நாட்டு தேவையை கணக்கில் கொண்டு பஞ்சு நூல் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு நூல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். 
Tags:    

Similar News