செய்திகள்
கோப்புபடம்.

மாணவர்-ஆசிரியர் நிர்ணய வழிமுறை வெளியீடு திருப்பூர் பள்ளிகளில் செயல்படுத்தும் பணிகள் தீவிரம்

Published On 2021-11-26 08:53 GMT   |   Update On 2021-11-26 08:53 GMT
9, 10ம் வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாகும்போது இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும்.
திருப்பூர்:

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளி கல்வி இணை இயக்குனர் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

1 முதல் 5-ம் வகுப்பு வரை துவக்கப்பள்ளிகளில் 60 மாணவர்கள் வரையில் 2 ஆசியர்கள், 61- 90 மாணவர்கள் வரை 3 ஆசிரியர்கள், 91 முதல் 120 மாணவர்கள் வரை 4 ஆசிரியர்கள், 121- 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்கள் என ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும். 

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிகளில் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கிட்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யவும், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை 50-க்கு அதிகமானால் அவ்வகுப்பினை இரண்டாக பிரித்து கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம். 

6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப்பள்ளியில் குறைந்த பட்ச மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம்  5 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். 

9,10ம்  வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாகும்போது இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும். மேலும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்திற்கு குறைந்த பட்சம் 25 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

தமிழ்வழி கல்வியில் ஆசிரியர் நிர்ணயம் செய்வது போலவே ஆங்கில வழி கல்வியிலும் பின்பற்றப்படவேண்டும். ஆங்கில வழி பிரிவுகளில் ஒரு வகுப்பிற்கு குறைந்த பட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். அதற்கும் குறைவாக இருப்பின் அக்குழந்தைகளை அருகாமையில் செயல்படும் ஆங்கில வழி பிரிவுகள் உள்ள பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு பள்ளியில் குறிப்பிட்ட பாடத்தில் உபரி ஆசிரியர் இருப்பின் பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் கடைசியாக அப்பள்ளியில் பணியில் சேர்ந்த இளையவரை தலைமை ஆசிரியர், உபரி ஆசிரியர் பட்டியலில் சேர்த்து பணி நிரவலுக்கு அனுப்ப வேண்டும். 

மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்தல் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News