செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் தொழில்துறை கருத்தரங்கை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2021-11-26 05:58 GMT   |   Update On 2021-11-26 07:05 GMT
சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் தொழில்துறை கருத்தரங்கில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை:

சென்னை கிண்டியில் சிஐஐ தொழில் கூட்டமைப்பு-எல்காட் சார்பில் 'கனெக்ட்'  தொழில்துறைக்கான கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2 நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தரவு மைய கொள்கையை வெளியிட்டார். மேலும், அரசின் மின் ஆளுமை நிறுவனம்-சென்னை கணிதத்துறை நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்த கருத்தரங்கில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

தகவல் தொழில்நுட்பம்தான் காலத்தை சுழல வைத்துக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துக்காக தனித்துறையை உருவாக்கியது திமுக ஆட்சி தான். சென்னை தரமணி முதல் மாமல்லபுரம் வரையில் ஐடி எக்ஸ்பிரஸ் சாலையாக மாற்றியது திமுக ஆட்சி தான்.

 தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்களாக திகழ்கிறார்கள். அவர்களை ஐடி துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரவு மையம் அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கும்.

12,525 கிராம ஊராட்சிகளிலும் தரமான இணைய சேவை வழங்கப்படுவதன் மூலம் ஊரகப்பகுதிகள் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பாலியல் பிரச்சினைகளை துணிச்சலுடன் சொல்லுங்கள்: பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
Tags:    

Similar News