செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

25, 26, 27-ந் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-11-23 08:50 GMT   |   Update On 2021-11-23 11:35 GMT
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.

கடந்த 5-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ள சேதங்கள் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 15-ந் தேதி உருவான மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழையை கொடுத்தது.

கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் இதுவரையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று கூறியதாவது:-

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும்.



இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

நாளை (24-ந்தேதி) திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். 25-ந் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும்.

சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

26 மற்றும் 27-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும்.

விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளில் 26, 27-ந் தேதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம், சோழவரம், பந்தலூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News