செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை பகுதியில் மழையால் நாற்றுகள் விற்பனை பாதிப்பு

Published On 2021-11-21 07:26 GMT   |   Update On 2021-11-21 07:26 GMT
நாற்றுப்பண்ணைகள் ஒவ்வொன்றும் தலா 7 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும்.
மடத்துக்குளம்:

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தக்காளி, கத்தரி, மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் அமைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகளில் வாங்கி நடவு செய்து வருகின்றனர்.

நாற்றுப்பண்ணைகள் ஒவ்வொன்றும் தலா 7 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். ஒரு ஏக்கருக்கு தக்காளி நாற்றுக்கள் 10 ஆயிரமும், மிளகாய் 7 ஆயிரம், கத்தரி 5 ஆயிரம், காலிபிளவர் 10 ஆயிரம் நாற்றுக்கள் தேவை உள்ளது. தக்காளி நாற்று 45 பைசா, மிளகாய் 80, கத்தரி, காலிபிளவர் 50 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பண்ணைகளில் குழித்தட்டுகளில் விதைகள் நடவு செய்து நாற்றுக்கள் வளர்க்கப்படுகிறது. இதில் தக்காளி 22 நாட்களிலும், மற்ற காய்கறிகள் 30 நாட்களுக்குள்ளும் வயல்களில் நடவு செய்ய வேண்டும். வட கிழக்கு பருவ மழை காலத்தில் தொடங்கும் சாகுபடி சீசனை எதிர்பார்த்து நாற்றுப்பண்ணைகளில் நாற்றுக்கள் உற்பத்தி தீவிரமடைந்தது. 

ஆனால் நடப்பு ஆண்டு மழை பொழிவு அதிகரித்த நிலையில் வயல்களில் தேங்கிய நீரை கழிக்க முடியாத சூழலில் நிலங்கள் காணப்படுகிறது. ஒரு மாதமாக மழை தொடர்வதால் உழவு, நடவு என எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் சாகுபடியை எதிர்பார்த்து நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்த நாற்றுக்கள் விற்பனையாகாமல்  பெருமளவு வீணாகி வருகிறது.

இதுகுறித்து நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:-

நாற்றுப்பண்ணைகள் பசுமை குடில் மற்றும் நிழல் வலை என்ற இரு அமைப்புகளில் உள்ளது. இதில் பசுமை குடில் அமைத்த நாற்றுப்பண்ணைகளிலுள்ள நாற்றுக்கள் மழையில் நனையாது. 

ஆனால் குழித்தட்டுக்களில் வளர்க்கப்படும் தக்காளி நாற்றுக்கள் 25 முதல் 30 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். அதற்கு மேல் இருப்பு இருந்தால் செடி வளர்வதற்கு தேவையான மண், சத்துக்கள் உள்ளிட்டவை கிடைக்காமலும், வேர்கள் செல்ல வழியில்லாமலும் பாதிக்கின்றன.

அதேபோல் மிளகாய், கத்தரி உள்ளிட்டவை அதிகபட்சமாக 35 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். நிழல் வலை பண்ணைகளில் மழை நீர் நேரடியாக நாற்றுக்களில் இறங்கி அழுகியும் உரிய காலத்தில் நடவு செய்யாமல் வீணாகியும் வருகிறது.

இவ்வாறு நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்த நாற்றுக்களில் 20 முதல் 50 சதவீதம் வரை என பல லட்சம் நாற்றுக்கள் நடவு செய்யாமல் வீணாகி வருகிறது. 

மேலும் தற்போதுள்ள நாற்றுக்கள் விற்பனையாகமல் உள்ளதால் அடுத்த கட்ட உற்பத்தியும் பாதித்து விவசாயிகளுக்கும் நாற்றுக்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே நாற்றுப்பண்ணைகள் பாதிப்பதை தவிர்க்க அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கவும், மழை குறைந்ததும் சாகுபடி துவக்குவதற்கு தேவையான நாற்றுக்கள் உற்பத்தி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News