செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பு

Published On 2021-11-20 07:35 GMT   |   Update On 2021-11-20 07:35 GMT
முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 141 அடியை கடந்ததால் மீண்டும் கேரள மாநில பகுதிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கூடலூர்:

152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் ‘ரூல் கர்வ்’ நடைமுறையை காரணம் காட்டி கடந்த மாதம் 29-ந் தேதி அணையின் நீர் மட்டம் 139 அடியை எட்டியபோது உபரிநீர் கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.

இதற்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘ரூல் கர்வ்’ நடைமுறைப்படி இன்று வரை 141 அடி வரை தேக்கவும், 30-ந் தேதி வரை 142 அடிக்குள் நிலை நிறுத்தவும் அதன் பிறகு உபரிநீரை வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றப்படுவதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனறு காலை அணை நீர் மட்டம் 141.05 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் 1840 கன அடி மின் உற்பத்திக்கும், 460 கன அடி இரைச்சல் பாலம் வழியாகவும் தேக்கப்படுகிறது.

கேரளாவுக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 141 அடியை கடந்துள்ளதால் இன்று காலை முதல் மீண்டும் 158 கன அடி கேரள பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 3096 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 7410 மி.கன அடியாக உள்ளது.

இதே போல வைகை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டியதால் 69.42 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து 3310 கன அடி. திறப்பு 2668 கன அடி. இருப்பு 5681 மி.கன அடி. மேலும் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

பெரியாறு 40.4, தேக்கடி 21, கூடலூர் 8.6, சண்முகாநதி அணை 2.5, மஞ்சளாறு 13, கொடைக்கானல் 8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News