செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் மழையால் அழுகும் காய்கறிகள் - விலை உயர வாய்ப்பு

Published On 2021-11-19 06:42 GMT   |   Update On 2021-11-19 06:42 GMT
கொடி முறையில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இருந்து மட்டும் சந்தைக்கு தக்காளி வரத்து காணப்படுகிறது.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செடி மற்றும் கொடி முறையில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிலும், ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

பிற மாநிலங்கள் மாவட்டங்களில் சாகுபடி இல்லாத நிலையில் உடுமலை பகுதியில் மட்டும் ஆகஸ்டு முதல் நவம்பர் வரை தக்காளி வரத்து சீசன் காலமாக இருக்கும். உடுமலை பகுதிகளில் விளையும், தக்காளி உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, இங்குள்ள கமிஷன் கடைகளில் ஏல முறையில் விற்பனை செய்யப்படும்.

கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர். உடுமலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருவதால் வயல்களில் நீர் தேங்கியுள்ளது. 

பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் மழை நீர் அதிகளவு தேங்கி செடிகளில் வேர் அழுகல், பூ உதிர்தல், காய்களில் நோய் தாக்கி, அழுகியுள்ளன.

இந்நிலையில் கொடி முறையில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இருந்து மட்டும் சந்தைக்கு தக்காளி வரத்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக 200 முதல் 300 பெட்டிகள் மட்டுமே வரத்து காணப்படுகிறது.

கேரள மாநிலம் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகளும் வந்து ஏல முறையில் கொள்முதல் செய்வதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இரு நாட்களாக 14 கிலோ கொண்ட தரமான தக்காளி பெட்டி ஆயிரம் ரூபாய் வரை விற்று வருகிறது. 

சில்லரை விற்பனையில் கிலோ ரூ.80வரை விற்று வருகிறது. மேலும், விலை ரூ.100 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வியாபாரிகள் கூறுகையில், தொடர் மழை பெய்தால் காய்கறி வரத்து பெருமளவு குறைந்து விடும். 

தக்காளி மற்ற மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படாத நிலையில் கொடி முறையில் சாகுபடி செய்த வீரிய ஒட்டு ரக தக்காளி ரகங்கள் மட்டுமே வரத்து காணப்படுகிறது. நல்ல சீசன் சமயத்தில் பெட்டி அதிகபட்சமாக 700 ரூபாய்க்கு விற்றுள்ளது. 

பல ஆண்டுகளுக்கு பின் தற்போது ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. அதே போல் மற்ற காய்கறிகளிலும் விலை உயர்ந்துள்ளது என்றனர். விவசாயிகள் கூறுகையில், தக்காளி அறுவடை சீசன் சமயத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செடிகள் அழுகியும், காய்கள் பழுத்தும், புள்ளி விழுந்தும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சாகுபடி செய்த வயல்களில் பறிக்க முடியாமல் முழுமையாக வீணாகியுள்ளது. மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர். தொடர் மழை காரணமாக, தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல்  சின்ன வெங்காயம் கிலோ ரூ. 50, வெண்டை, கத்தரி, அவரை, புடலை பாகற்காய் என அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளதோடு பெரும்பாலான காய்கறிகள் மழைக்கு அழுகியும், தரமற்றதாகவும் உள்ளது. காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் அதிகளவு பாதித்துள்ளனர்.
Tags:    

Similar News