செய்திகள்
வானிலை நிலவரம்

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைகிறது- மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published On 2021-11-15 08:13 GMT   |   Update On 2021-11-15 08:13 GMT
குறைந்த காற்றழுத்தம் வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை:

அந்தமானை ஒட்டி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்தம் வலுப்பெறுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கேரள கடலோர பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 17 மற்றும் 19 ஆகிய நாட்களில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

குறைந்த காற்றழுத்தம் வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னையில் வரும் 17, 18 ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் 17,18,19ஆம் தேதி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 54 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News