செய்திகள்
வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த இன்றும் நாளையும் சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம்

Published On 2021-11-12 23:28 GMT   |   Update On 2021-11-13 03:42 GMT
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது உள்ளிட்டவற்றுக்காக இம்மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம்.
சென்னை:
 
2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை (பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம்) மேற்கொள்ள விரும்புகிறவர்கள், வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களை அங்குள்ள அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் இதுவரை பட்டியலில் பெயர் பதிவுசெய்யாத அனைவரும் 6-ம் எண் விண்ணப்பத்தை அளித்து பெயர் பதிவுசெய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதி அளிக்கும் பகுதியை கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புகைப்படம் தெளிவாக இருப்பதற்காக 200 டிபிஐ ரெசல்யூசன் கொண்ட புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே பெயர் பதிவுசெய்து, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம்மாறிய வாக்காளர்கள், திருத்தத்துக்காக 6-ம் எண் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். தொகுதிக்குள் முகவரி மாறியவர்கள் 8ஏ விண்ணப்பம் வழங்க வேண்டும். பட்டியலில் திருத்தங்கள் ஏதாவது மேற்கொள்ள 8-ம் எண் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ, தொலைந்துவிட்டாலோ, சிதைந்துவிட்டாலோ புதிய அட்டைக்காக தாலுகா அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் 001 விண்ணப்பத்தை அளிக்கவேண்டும்.

சிறப்பு முகாம்களுக்கான பணிகளை செய்யும்போதும், சிறப்பு முகாம்கள் நடக்கும்போதும் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News