செய்திகள்
தண்ணீர் கொண்டுவரப்படாததால் சுத்திகரிப்பு தொட்டி வறண்டு மணல் மட்டும் உள்ளதை படத்தில் காணலாம்.

கோத்தகிரியில் மின்னழுத்த குறைபாடு: சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Published On 2021-11-12 12:19 GMT   |   Update On 2021-11-12 12:19 GMT
மின்னழுத்த குறைபாடு காரணமாக கோத்தகிரி சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கோத்தகிரி:

கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சுமார் ரூ.10.60 கோடியில் கொண்டுவரப்பட்டது. இதற்காக அளக்கரை பகுதியில் செல்லும் ஓடையை மறித்து, அந்த தண்ணீரை சேமித்து வைப்பதற்காக பிரமாண்டமான தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அங்கிருந்து கோத்தகிரி பகுதி வரை பெரிய குழாய்கள் பதித்து 7 பகுதிகளில் நீர் உந்து மோட்டார் அறைகளும் கட்டப்பட்டன. மேலும் கோத்தகிரியில் உள்ள உயரமான பகுதியான சக்திமலைப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, தலா 8 லட்சம் லிட்டர் என மொத்தம் 16 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விநியோகத்திற்கு தேக்கி வைக்க 2 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.

இதுமட்டுமின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு வசதியாக கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் ரூ.50 லட்சம் செலவில், நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டு, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் தொடங்கியது.

ஒவ்வொரு நீர் உந்து அறையிலும் 60 குதிரைதிறன் கொண்ட மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டன. இந்த 7 மின் மோட்டார்களும் ஒரே நேரத்தில் இயங்கினால் மட்டுமே, சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.

இந்தநிலையில் நீர் உந்து அறைகள் அமைந்துள்ள ஒரு சில பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்கள் அங்கு நிலவும் மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி பழுதடைந்து வந்தன. இதனால் அளக்கரையிலிருந்து கோத்தகிரிக்கு தண்ணீரைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோடநாடு அருகே உள்ள ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கோத்தகிரி பகுதி மக்களுக்கு அந்த தடுப்பணை நீரை பேரூராட்சி நிர்வாகம் தடையின்றி விநியோகித்து வருகிறது. ஆனால் கோடை காலங்களில் ஈளாடா தடுப்பணை நீர் கோத்தகிரி பகுதி குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்வதற்கு போதுமானதாக இருக்காது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வரும் கோடை காலம் தொடங்குவதற்கு முன், மின்னழுத்த குறைபாடு உள்ள பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைத்து, தடையின்றி குடிநீரை விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
Tags:    

Similar News