செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

முல்லைப்பெரியாறு அணைக்கு விளம்பரத்துக்காக செல்லவில்லை- அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் பதில்

Published On 2021-11-08 03:49 GMT   |   Update On 2021-11-08 03:49 GMT
தேதியை குறித்து வைக்கும் அளவுக்கு முல்லைப்பெரியாறு அணைக்கு விளம்பரத்திற்காக செல்லவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட்ட தேதிகளை கூற முடியுமா? என முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அளித்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நான் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று வந்த தேதிகளை குறிப்பிட முடியுமா? பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் காலண்டரில் பதிவாகி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பொதுவாக, விளம்பரத்திற்காக செல்பவர்கள்தான் இதையெல்லாம் குறித்து வைத்திருப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கத்துடன் செல்பவர்கள்தான், சென்ற தேதியை எல்லாம் குறித்துக்கொள்ளமாட்டார்கள்.

இப்போது ஆட்சியில் இருப்பது தி.மு.க. எனவே, காலண்டரில் இருக்கிறதா என்பதை அவர்தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதும் உண்மையைச் சொல்வார்களா என்பது சந்தேகம்தான். அப்போது பொதுப் பணித்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் என்னுடன் வந்தனர். அவர்கள் பணியில் இருந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

அதைப்போல, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடும்போது அணையின் பின்புறம் இருந்துதான் தண்ணீர் திறக்க வேண்டும், அணைக்குப்போக வேண்டிய அவசியம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதன்மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வளவு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து ஒரு வார்த்தைகூட வாய்திறக்காதது வேதனை அளிக்கிறது.

இனியாவது, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து தெளிவாக விளக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News