செய்திகள்
கோப்புப்படம்

தடையை மீறி பட்டாசு வெடித்த 2,400 பேர் மீது வழக்கு- தமிழகம் முழுவதும் போலீஸ் நடவடிக்கை

Published On 2021-11-05 07:45 GMT   |   Update On 2021-11-05 09:33 GMT
சேலம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 67 பேர் மீதும், நாமக்கல் மாவட்டத்தில் 30 பேர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:

தீபாவளி அன்று அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாட்டை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதன்படி காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கோர்ட்டு தெரிவித்திருந்தது.

இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்த சுப்ரீம் கோர்ட்டு சரவெடிகளை வெடிப்பதற்கும் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் போலீசார் தெரிவித்து இருந்தனர். அதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை நேற்று பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடினர். பொதுமக்கள் கோர்ட்டு விதித்திருந்த தடையை மீறியும், நேரக்கட்டுப்பாட்டை தாண்டியும் பட்டாசுகளை வெடித்தனர்.

இது தொடர்பாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 2,400 பேர் மீது நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து வெளி மாவட்டங்களில் 1,614 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் திரண்டு பட்டாசுகளை வெடித்தனர்.

அப்போது சுப்ரீம் கோர்ட்டால் தடை விதிக்கப்பட்ட சரவெடிகளும் சரமாரியாக வெடிக்கப்பட்டன. இது தொடர்பாக சென்னை முழுவதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழக அரசின் வழிகாட்டு விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளி அன்று மட்டும் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்திய 32 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 பேர் மீதும், நாகையில் 7 பேர் மீதும், மயிலாடுதுறையில் 14 பேர் மீதும் வழக்கு போடப்பட்டு இருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் 60 பேர் மீதும், திருப்பத்தூரில் 44 பேர் மீதும், ராணிப்பேட்டையில் 21 பேர் மீதும், திருவண்ணாமலையில் 42 பேர் மீதும் பட்டாசு தொடர்பான வழக்குகள் பாய்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 67 பேர் மீதும், நாமக்கல் மாவட்டத்தில் 30 பேர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 29 பட்டாசு வழக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் 27 வழக்குகளும், கடலூர் மாவட்டத்தில் 11 வழக்குகளும் பதிவாகி உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் 27 பேர் மீதும், தென்காசி மாவட்டத்தில் 35 பேர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 97 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை போன்றே புதுவை மாநிலத்திலும் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 32 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தடையை மீறி பட்டாசு வெடித்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும், அவர்கள் கோர்ட்டில் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News