செய்திகள்
தி நகர் ரங்கநாதன் தெரு (கோப்புப்படம்)

தீபாவளி விற்பனை களைகட்டியது- சென்னை கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2021-10-31 09:22 GMT   |   Update On 2021-10-31 09:48 GMT
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் விடுமுறை நாளான இன்று சென்னை கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது.
சென்னை:

தீபாவளி பண்டிகையில் இனிப்பு, புத்தாடை, பட்டாசு ஆகிய மூன்றும் தான் பிரதானம். எனவே ஜவுளிக்கடை மற்றும் இனிப்பு கடைகளில் கூட்டம் அலைமோதியது.

பாரி முனையில் என்.எஸ்.சி. போஸ் ரோடு பகுதி மக்கள் கூட்டதால் நிரம்பி வழிந்தது. இதே போல் புரசை வாக்கம் பகுதியிலும் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் மிக முக்கிய வணிக பகுதியான தி.நகர் ரங்கநாதன் தெரு கொரோனா காலத்துக்கு பிறகு இந்த ஆண்டு களை கட்டியது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவதை தடுக்க 90 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பாண்டிபஜார், உஸ்மான் ரோடு பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஜவுளிக்கடைகள் உள்ளன.

கூட்டம் அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தண்ணீர் தொட்டி சந்திப்பு, கல்லறை சாலை சந்திப்பு உள்பட 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

போரூர், பாடியிலும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தாம்பரம் பகுதியில் குரோம்பேட்டையில் ஜவுளிக்கடைகளில் அதிக அளவு கூட்டம் திரண்டது. வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் திரளும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பில் நவீன வசதிகளை செய்துள்ளார்கள்.

தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



கோயம்பேடு பஸ் நிலையம், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, தி.நகர், தாம்பரம் ரெயில்வே ஸ்டே‌ஷன், தாம்பரம் தற்காலிக பஸ் நிலையம், பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையம், கே.கே.நகர் தற்காலிக பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கொண்டு வரும் உடமைகள் சுழற்சி முறையில் சோதனை செய்யப்பட்டது.

பேஸ்-ஆப் என்ற நவீன தொழில் நுட்பத்தையும், போலீசார் பயன்படுத்தி வருகிறார்கள். திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அவர்களில் யாராவது கூட்டத்திற்குள் நடமாடினால் கண்காணிப்பு கேமரா பேஸ்-ஆப் மூலம் காட்டி கொடுக்கும். அதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியில் இருக்கும் போலீசாருக்கு வயர்லெஸ் மூலம் தெரிவித்து கண்காணிப்பார்கள்.



Tags:    

Similar News