செய்திகள்
ரே‌ஷன் அரிசி

கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-10-30 10:40 GMT   |   Update On 2021-10-30 10:40 GMT
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் நேற்று இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த டெம்போ ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அந்த டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்த கடை ஒன்றில் டெம்போவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் டெம்போவை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ரேசன் அரிசியை கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசியுடன் அந்த டெம்போவை போலீசார் பறிமுதல் செய்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு 5 டன் ரேசன் அரிசியையும், டெம்போவையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News