செய்திகள்
அமைச்சர் கே.என்.நேரு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை

Published On 2021-10-30 06:32 GMT   |   Update On 2021-10-30 06:32 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சேலம்:

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று காலை சேலம் வந்தார். சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன்கவுதம சிகாமணி, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி போன்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனைகள் வழங்கினார்.



மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிப்பது என்றும் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார்.

இதில் சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, கோட்ட நிர்வாகிகள், மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலெக்டர் கார்மேகம் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் நடந்து முடிந்த வளர்ச்சி பணிகள் மட்டுமின்றி புதிதாக தொடங்க வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும் நகர்ப்புறங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.


Tags:    

Similar News