செய்திகள்
நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்து காணப்படும் அமராவதி அணை.

முழு கொள்ளளவை எட்டும் அமராவதி அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2021-10-28 07:37 GMT   |   Update On 2021-10-28 07:37 GMT
திருப்பூர்,கரூர் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமார் 47 ஆயிரம் ஏக்கருக்கு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 20 - ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் , கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

மேலும்  நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வந்ததால் 7 முறை அணை முழுக் கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து திருப்பூர்,கரூர் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமார் 47 ஆயிரம் ஏக்கருக்கு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 20 - ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் 90 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 85 அடியாக உயர்ந்துள்ளது. 

இதனிடையே குமரலிங்கம், சர்க்கார்  கண்ணாடிப் புத்தூர் , சோழமாதேவி, கணியூர் , கடத்தூர் , காரத்தொழுவு ஆகிய 6 ராஜவாய்க்கால்களுக்கு இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட  தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசு உத்தரவின்படி பொதுப்பணித்துறையினர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை.

பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அமராவதியின் உப நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், அணை நிரம்ப இன்னும் 5 அடியே உள்ளதால் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறையினர் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அணைக்கு வினாடிக்கு 655 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே அமராவதி அணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிரம்பிய நிலையில், மீண்டும் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News