செய்திகள்
குடவாசல் அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்

குடவாசல் அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக்கோரி சாலை மறியல் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published On 2021-10-27 14:08 GMT   |   Update On 2021-10-27 14:08 GMT
குடவாசல் அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பெரும்பண்ணையூர் ஊராட்சியை சேர்ந்த கோவில்பத்து, எலந்தவனஞ்சேரி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு ஒதுக்கப்பட்ட மயான பகுதியில் சாலை மேம்பாடு செய்ததால் மயானத்துக்கு போதுமான இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.

எனவே மயானத்துக்கு இடம் ஒதுக்கி தரக்கோரி கோவில்பத்து, எலந்தவனஞ்சேரி கிராம மக்கள் நேற்று கும்பகோணம்- திருவாரூர் சாலையில் உள்ள காப்பனாமங்கலம் எண்கண் ஆர்ச் அருகில் மக்கள் நலக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, தாசில்தார் உஷாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மயானம் அமைப்பது குறித்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்தால் தான் போராட்டத்தை கைவிட முடியும் என மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவாய் கோட்டாட்சியர் மூலம் வருகிற 3-ந் தேதி(புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதன் பேரில் மறியல் கைவிடப்பட்டு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மறியல் போராட்டம் காரணமாக கும்பகோணம்- திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News