செய்திகள்
அதிமுக

சசிகலாவை சந்தித்தால் நடவடிக்கை பாயும்- அ.தி.மு.க. எச்சரிக்கை

Published On 2021-10-27 10:03 GMT   |   Update On 2021-10-27 10:03 GMT
சசிகலாவை யாராவது தொடர்பு கொண்டாலோ, நேரில் சந்தித்தாலோ அது கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி வரும் சசிகலா அ.தி.மு.க.வினரின் ஆதரவை பெறுவதற்காக அரசியல் நகர்வுகளை தொடங்கி இருக்கிறார்.

அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இன்று அவர் முதலாவதாக தஞ்சாவூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து அவர் பின்னர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அப்போது அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவை சந்திக்கக் கூடும் என்று தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் கட்சி கட்டுப்பாடு என்பது முக்கியமானதாகும். ஏற்கனவே கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சசிகலாவுடன் போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி சசிகலாவை யாராவது தொடர்பு கொண்டாலோ, நேரில் சந்தித்தாலோ அது கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படும்.

இவ்வாறு கட்சி கட்டுப்பாட்டை மீறி சசிகலாவை சந்திக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
Tags:    

Similar News