செய்திகள்
சசிகலா

நவம்பர் 1-ந்தேதி ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை: அ.தி.மு.க. நிர்வாகிகளை இழுக்க முயற்சி

Published On 2021-10-27 06:33 GMT   |   Update On 2021-10-27 06:33 GMT
டிசம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிரடி பயணம் செய்து தனது திட்டத்தை நிறைவேற்ற சசிகலா முனைப்புடன் உள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க.வை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சசிகலா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார்.

ஆனால் அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

இந்தநிலையில் சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவரது இந்த கருத்து அ.தி.மு. க.வில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களே சசிகலாவை ஏற்க மறுத்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் சசிகலாவை ஏற்க மறுத்து உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது சில ஆதரவாளர்களும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

சசிகலாவால் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சர்ச்சை எந்த மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தநிலையில் சசிகலா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சிகளை தொடங்கி உள்ளார். அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இதுவரை எடுத்த முயற்சிகள் தோல்வியை தழுவியதால் அடுத்த கட்டமாக புதிய வியூகங்களை வகுக்க அவர் முடிவு செய்து உள்ளார்.

நேற்று காலை சென்னையில் இருந்து அ.தி.மு.க. கொடி கட்டிய ஜெயலலிதா பயன்படுத்திய பிரசார வாகனத்தில் புறப்பட்ட அவர் விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி வழியாக தஞ்சை சென்றார். அவரை பின்தொடர்ந்து சுமார் 15 வாகனங்களில் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். வழிநெடுக அவருக்கு அ.ம.மு.க. தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். நேற்று மாலை அவர் தஞ்சை சென்று சேர்ந்தார்.

இன்று (புதன்கிழமை) காலை தஞ்சை அருகே உள்ள பூண்டி கல்லூரியில் நடந்த டி.டி.வி. தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

இன்று இரவு அவர் தஞ்சையில் தங்குகிறார். அந்த சமயத்தில் தஞ்சையில் உள்ள அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலருடன் பேச அவர் அழைப்பு விடுத்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரை சந்திக்க சசிகலா காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால் அந்த மூத்த தலைவர் சசிகலா அழைப்பை ஏற்பாரா என்பது இன்று மாலை தெரிந்து விடும்.



சசிகலா நாளை (வியாழக்கிழமை) காலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு மதுரை செல்கிறார். மதுரையில் உள்ள சொகுசு ஓட்டலில் அவர் தங்குவதற்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாளை மதுரையில் தங்கும் சசிகலா தென் மாவட்ட அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கு வலை விரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையில் இருந்து அவர் நெல்லை செல்வதற்கும் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை. நாளை இரவு மதுரையில் உள்ள சில அ.தி.மு.க. முக்கிய தலைவர்களுடன் அவர் தொலைபேசியில் பேசவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினருக்கு சசிகலா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த தகவலை திட்டவட்டமாக உறுதியுடன் மறுத்தனர்.

சசிகலாவை சந்திக்க வைக்கும் வகையில் யாரும் தங்களை தொடர்பு கொண்டு பேசவில்லை என்றும் தெரிவித்தனர். டிசம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட உள்ள நிலையில் தேவையில்லாத சர்ச்சையில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று
அ.தி.மு.க.
மூத்த தலைவர்கள் தயங்குவதால் சசிகலாவை யாரும் வெளிப்படையாக ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சசிகலாவை சந்தித்தால் நிச்சயம் நடவடிக்கை பாயும். இந்த நடவடிக்கையில் இருந்து தப்பவே சசிகலாவை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சந்திக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சசிகலா மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 8 மணிக்கு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பிறகு ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னுக்கு புறப்பட்டு செல்கிறார்.

அங்கு 10.30 மணியில் இருந்து 11 மணி வரை முத்துராமலிங்க தேவர் கோவிலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் மதுரை வந்து ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு மீண்டும் தஞ்சைக்கு புறப்பட்டு செல்கிறார்.

தஞ்சையில் சசிகலா 30, 31 மற்றும் நவம்பர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தங்கி இருக்கிறார். இந்த 3 நாட்களும் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க வியூகம் அமைத்து காய் நகர்த்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறார். 30, 31-ந் தேதிகளில் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை செய்கிறார்.

நவம்பர் 1-ந் தேதி தஞ்சையில் 4 மாவட்ட அ.ம.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட சசிகலா ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அப்போது சில முக்கிய முடிவுகளை சசிகலா எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டும் திட்டத்தை ஏற்கனவே சசிகலா கையில் வைத்து உள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக அந்த திட்டம் தள்ளி போய் கொண்டே இருந்தது. டிசம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிரடி பயணம் செய்து தனது திட்டத்தை நிறைவேற்ற சசிகலா முனைப்புடன் உள்ளார்.

முதல் கட்டமாக டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கவனம் செலுத்த தயாராகி வருகிறார். எனவே நவம்பர் 1-ந் தேதி தஞ்சையில் 4 மாவட்ட ஆதரவாளர்களுடன்பேசிய பிறகு சசிகலாவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.

இந்த நிலையில் வருகிற 30-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்கிறார். அப்போது அவர் அ.தி.மு.க.வின் சார்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் திட்டங்களை தெரிவிப்பார் என்று தெரிகிறது.

இதை தெரிந்து கொண்டு நவம்பர் 1-ந்தேதி ஆலோசனை நடத்தி சசிகலா புதிய வியூகம் அமைக்க உள்ளார். எனவே நவம்பர் முதல் வாரம் அ.தி.மு.க.வில் அடுத்தடுத்த அதிரடிகளும், பரபரப்பான திருப்பங்களும் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்று மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அ.ம.மு.க., ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்றும் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.


Tags:    

Similar News