செய்திகள்
கோப்புபடம்

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் - வேளாண்துறை செயல்படுத்துமா?

Published On 2021-10-27 04:36 GMT   |   Update On 2021-10-27 04:36 GMT
சிறு தானியங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை ஆதாரமாக கொண்டு மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கம்பு, தினை, சோளம், கொண்டைக்கடலை உள்ளிட்ட தானியங்கள் இப்பகுதியிலேயே உற்பத்தியாகி சந்தைகளுக்கு வரத்து சீராக இருந்து வந்தது.

பல்வேறு காரணங்களால் தானிய சாகுபடியும், சிறு தானிய உணவுகள் பயன்பாடும் குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாக சிறு தானிய உணவுகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதனால் சிறு தானியங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த இடைவெளியால் சிறு தானியங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இதுகுறித்து தானியங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள சிறு வியாபாரிகள் கூறியதாவது:

உடல் நலனுக்கு நன்மை தரும், சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தரமான அதேவேளையில், விலை குறைவாக தானியங்கள் கிடைப்பதில்லை. 

உடுமலை பகுதியில் இவ்வகை சாகுபடிகள் வெகுவாக குறைந்துவிட்டது. முன்பு அறுவடை சீசன் சமயங்களில் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று சிறு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோம். தற்போது அந்நிலை இல்லை என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆர்வமிருந்தாலும் தேவையான விதைகள் கிடைப்பதில்லை. வேளாண்துறை சார்பில் சிறப்புத் திட்டங்களின் கீழ், மானியத்தில் சிறு தானிய விதைகளை வழங்க வேண்டும். 

பருவ மழைகள் கைகொடுத்தால் இவ்வகை தானியங்கள் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்றனர். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் சோளம் உட்பட தானியங்கள் சாகுபடிக்கான விதைப்பு துவங்கியுள்ளது. தொடர் மழையால் நடப்பு சீசனில் சிறுதானிய சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News