செய்திகள்
கொரோனாவுக்கு பலியான டாக்டர் அருள்ராஜின் உருவப்படத்திற்கு மருத்துவ பணியாளர்கள் அஞ்சலி செலுத்திய காட்சி.

திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கொரோனாவுக்கு பலி - பொதுமக்கள், செவிலியர்கள் அஞ்சலி

Published On 2021-10-26 09:33 GMT   |   Update On 2021-10-26 09:33 GMT
திருப்பூரில் கடந்த மாதம் வரை 100க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 80க்கு கீழ் குறைந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் என்.ஆர்.கே. புரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் அருள்ராஜ். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அருள்ராஜ் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணமாகவில்லை. 

இதையடுத்து மதுரைக்கு சென்ற அவர், ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அருள்ராஜ்  இறந்தார்.  

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி வருகிறது. கடந்த மாதம் வரை 100க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 80க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் கொரோனாவுக்கு டாக்டர் பலியான சம்பவம் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தநிலையில் மருத்துவர் அருள்ராஜ் பணியாற்றி வந்த புதுராமகிருஷ்ணபுரம் நகர்புற சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் டாக்டர் அருள்ராஜின்  உருவப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கலந்து கொண்டு மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தினார். செவிலியர்கள் கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News