செய்திகள்
ராமதாஸ்

பள்ளிகளில் மதிய உணவு நேரத்தை 1 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

Published On 2021-10-26 09:02 GMT   |   Update On 2021-10-26 10:36 GMT
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் குறைந்தது ஒரு மணி நேரம் மதிய உணவு இடைவேளை விடப்படுவதும், ஒரு நாளைக்கு ஒரு பாடவேளையாவது விளையாட்டு, உடற்பயிற்சிக்கு ஒதுக்கப்படுவதையும் அரசும், பள்ளி நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த சில நாட்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா அச்சம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மாணவர்களுக்கு பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பது மட்டுமின்றி மன அழுத்தத்தையும் போக்கும். அதே நேரத்தில் பள்ளி மாணவ- மாணவியர் மத்தியில் அதிகரித்து வரும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை போக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை உணவு இடைவேளை சராசரியாக 40 நிமிடங்களாகவும், தனியார் பள்ளிகளில் 30 நிமிடங்களாகவும் குறைக்கப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் உணவு இடைவேளையின் ஒரு பகுதி பாடம் நடத்துவதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மீதமுள்ள நேரத்தில் மதிய உணவை உண்பதும், வழக்கமாக செய்ய வேண்டிய பிற பணிகளை நிறைவு செய்து வகுப்புகளுக்குச் செல்வதும் சாத்தியமல்ல. அதனால், பெரும்பான்மையான மாணவ, மாணவியர் தங்களின் மதிய உணவின் ஒரு பகுதியை மட்டுமே சாப்பிடுகின்றனர்; பலர் உணவு சாப்பிடாமல் பட்டினியாக வகுப்புக்குச் செல்கின்றனர். பெரும்பான்மையான குழந்தைகளின் சத்துக்குறைவுக்கு இதுவே காரணம்.

நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு, பலவகையான நோய்கள் ஆகியவற்றை அவர்கள் அனுபவிக்கின்றனர். இந்த நிலையை மாற்ற அரசு, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆகியோர் இணைந்து பாடுபட வேண்டும்.

அதற்கான முதல் நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் குறைந்தது ஒரு மணி நேரம் மதிய உணவு இடைவேளை விடப்படுவதும், ஒரு நாளைக்கு ஒரு பாடவேளையாவது விளையாட்டு, உடற்பயிற்சிக்கு ஒதுக்கப்படுவதையும் அரசும், பள்ளி நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் வாரத்திற்கு ஒரு பாடவேளையாவது நுண்ணூட்டச் சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

பெற்றோரும் தங்களின் பிள்ளைகளுக்கு உடனடி உணவுகளை தயாரித்து வழங்காமல், காய்கறிகள், பருப்பு, சிறுதானியங்கள் நிறைந்த உணவுகளை பள்ளிகளுக்கு கொடுத்தனுப்ப வேண்டும். அதன்மூலம் மாணவ, மாணவியரின் நலவாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... அ.தி.மு.க. அரசு சொன்னதால் சி.சி.டி.வி. கேமராக்களை அகற்றினோம்- அப்பல்லோ மருத்துவமனை தகவல்

Tags:    

Similar News