செய்திகள்
கோப்புபடம்

தக்காளி சாகுபடியில் சேதத்தை தவிர்க்க கொடி கட்டுதலை பின்பற்றும் விவசாயிகள்

Published On 2021-10-26 06:38 GMT   |   Update On 2021-10-26 06:38 GMT
சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், வீரிய ரக விதைகள் ஆகியவற்றை தக்காளி சாகுபடியில் விவசாயிகள் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி உற்பத்தியில் இப்பகுதி முக்கிய பங்கு வகிக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றுவது முக்கிய காரணமாகும்.

சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், வீரிய ரக விதைகள் ஆகியவற்றை சாகுபடியில் தவறாமல் பின்பற்றுகின்றனர். இதனால், ஏக்கருக்கு 10 டன்னுக்கு மேல் விளைச்சல் எடுக்கப்பட்டாலும் பூ மற்றும் பிஞ்சு உதிர்வால் மகசூல் பாதிக்கப்படுகிறது.

மகசூல் குறைவை தவிர்க்கவும், மழைக்காலத்திலும் தரமான தக்காளியை உற்பத்தி செய்யவும் கொடிக்கட்டுதல் முறையை விவசாயிகள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். செடிகளில் அதிகளவு காய்கள் பிடிக்கும்போது எடை தாங்க முடியாமல் செடிகள் சாய்ந்து விடும். 

பருவமழை காலத்திலும் இப்பிரச்சினை ஏற்பட்டு அறுவடைக்கு முன் காய்கள் மண்ணில் விழுவதால் தரம் குறைகிறது.

தக்காளி சேதத்தை தவிர்க்கவும், விளைச்சலை உயர்த்தும் வகையிலும் செடிகளுக்கு கொடிகட்டும் முறையை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிக எடையினால் செடிகள் கீழே சாய்வது மற்றும் பழங்கள் வீணாவது தடுக்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: 

தக்காளிச் செடிகளில் 3 மாதத்திலிருந்து 6 மாதம் வரை காய்கள் பிடிக்கிறது. செடிகளின் பாரம் அதிகரிப்பதால் பூக்களும், பிஞ்சுகளும் அதிகம் உதிர்கின்றன. கொடிக்கட்டுதல் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்துள்ளது.

தோட்டங்களில் 5 செடிகளுக்கு இடையில் குச்சி நடப்பட்டு மேல்பகுதியில் சணல் கயிறு வாயிலாக இணைத்து காய்ப்புக்கு வந்த பின் கிளைகளை  மேல் கம்பியுடன் இணைக்க வேண்டும். காற்றின் வாயிலாக, பெயர்ந்து விடாமல் தடுக்க, கட்டுக்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் வாயிலாக செடிகள் காற்று மற்றும் பாரம் தாங்காமல் கீழே சாய்வது தடுக்கப்படுகிறது. மேலும் எதிர்பார்த்த மகசூலும் கிடைக்கிறது.

கொடிக்கட்டுதல் முறைக்கு சணல் சரடு, கம்பி மற்றும் ஆட்கள் கூலி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியம் வழங்கினால் உதவியாக இருக்கும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News