செய்திகள்
கே.பி.முனுசாமி

கடிதம் எழுதி கொடுத்தபடி நடந்துகொள்ளுங்கள்... சசிகலாவைக் கேட்டுக் கொண்ட கே.பி.முனுசாமி

Published On 2021-10-25 14:53 GMT   |   Update On 2021-10-25 14:53 GMT
சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை:

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதா? வேண்டாமா? என்பது கடந்த சில தினங்களாக கட்சி வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. சமீபத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என, தனது பெயரில் கல்வெட்டை திறந்து வைத்தார். இதனால் இதன்மூலம் அதிமுகவில் இணையும் தனது விருப்பத்தை தொடர்ந்து சசிகலா வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அதிமுக தலைமை ஏற்பதாக இல்லை. எனினும் முக்கிய தலைவர்கள் கூறும் கருத்து மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது. 

கட்சியில் இரட்டை தலைமை குறித்த கேள்விக்கும், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றிய கேள்விக்கும் பதிலளித்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களின் இயக்கம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார்.

சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை நினைவுபடுத்திய ஜெயக்குமார், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எழுதிக் கொடுத்த கடிதத்தின்படி சசிகலா நடந்துகொள்ளவில்லை என்றால், வியாபார ரீதியாக அவர் ஜெயலலிதாவை பயன்படுத்திக்கொண்டதாக அர்த்தம் என முன்னாள் அமைச்சர் கே.சி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும்  கூறியதாவது:-

சசிகலாவை அம்மா அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றியபின்பு மீண்டும் வீட்டுக்கு அழைத்தபோது ‘நானோ அல்லது என்  குடும்பமோ எந்த சூழலிலும் அரசியலுக்கு வரமாட்டோம். அக்காவை பாதுகாத்துக்கொள்வதுதான் என் தலையாய கடமை’என்று சசிகலா முழு மனதுடன் கடிதம் எழுதி கொடுத்த கடிதத்தை மீண்டும் மனசாட்சியுடன் நினைவுகூரவேண்டும். அப்படி செய்து, இந்த இயக்கத்தை நல்லமுறையில் நடத்துங்கள் என்று வாழ்த்தினால், அம்மாவின் உண்மையான சகோதரியாக அவர் வருவார். இல்லாவிட்டால், அவர் வியாபார  ரீதியாகத்தான் அம்மாவை பயன்படுத்தினார் என்று சொல்ல முடியும்.

இவ்வாறு அவர்  கூறினார்.
Tags:    

Similar News