செய்திகள்
தலைப்பாகை கட்டி வந்து மனு கொடுத்த பொதுமக்கள்.

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தலைப்பாகை கட்டி வந்து மனு

Published On 2021-10-25 09:46 GMT   |   Update On 2021-10-25 09:46 GMT
திருப்பூர், பல்லடம், கன்னம்பாளையம், அவிநாசி,தெக்கலூர், மங்கலம், 63 வேலம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கூலி உயர்வு கேட்டு தலைப்பாகை அணிந்து வந்து மனு கொடுத்தனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ,பல்லடம், கன்னம்பாளையம், அவிநாசி,தெக்கலூர், மங்கலம், 63 வேலம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை நேரம் 10 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாகவும், விசைத்தறிகள் இயங்கும் நேரம் 16 மணி நேரமாகவும் உள்ளது.

ஆனால் தொழிலாளியின் உடல் உழைப்புக்கு தக்கபடி கூலி கிடைக்காத நிலை இருக்கிறது. அவர்களுக்கு எந்தவித சமூக பாதுக்காப்பும் முழுமையாக கிடைப்பதில்லை. விசைத்தறி தொழிலாளிக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி 7ஆண்டுகளாகிறது. இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. 

அத்தியாவசியமான அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் குடும்பங்களின் கல்வி , மருத்துவம் மற்றும் உணவு பொருட்களுக்காக கூடுதலாக செலவாகிறது. 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட எந்தவித நிவாரணமும் கிடைக்காமல் வேலையை இழந்து, வருமானம் இழந்து எதிர்பாராத செலவுகள் வரும்போது வட்டிக்கு கடன் வாங்கி மீள முடியாமல் மிகுந்த துயரத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

ஆகவே தாங்கள் தலையீடு செய்து ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும்விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேசி கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News