செய்திகள்
கடல்போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணையை படத்தில் காணலாம்.

67-வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

Published On 2021-10-24 08:23 GMT   |   Update On 2021-10-24 08:23 GMT
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67-வது முறையாக 100 அடியை எட்டியது.
மேட்டூர்:

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை 120 அடி உச்சநீர்மட்டம் கொண்டது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர், அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அணை நீர்மட்டம் 104 அடியாக இருந்தது.

பின்பு மழை குறைந்ததால் நீர்மட்டம் சரிய தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி உயரத்தை எட்டியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் அடுத்த இரு தினங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே சரிய தொடங்கியது.

கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் அணை நீர்மட்டம் 68 அடியாக சரிந்தது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் தொடர் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது.


கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அணை நீர்மட்டம் 74 அடியாகவும், பின்பு இந்த மாதம் 10-ந்தேதி 80 அடியாகவும் அதிகரித்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் கடந்த 17-ந்தேதி அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் பகுதியில் மேக பெருவெடிப்பு காரணமாக பெய்த கன மழையினால் ஒரே நாளில் நீர்வரத்து 40 ஆயிரம் கன அடி ஆனது.

இதனால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து நேற்று 97 அடியை கடந்தது. இன்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரத்து 650 ஆக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு பாசனத்துக்கு 100 கன அடி தண்ணீரும் கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 650 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டன. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட அணைக்கு வரும் தண்ணீர் அளவு பல மடங்கு அதிகமானதால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 2 அடி உயர்ந்தது.

இன்று காலை அணை நீர்மட்டம் 99.68 அடியாக இருந்தது. பின்னர் 11 மணியளவில் அணை 100 அடியை எட்டியது. இந்த ஆண்டில் 2-வது முறையாகவும், அணை வரலாற்றில் 67-வது முறையாகவும் அணை 100 அடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அணை 100 அடியை எட்டியதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து
மேட்டூர் அணை
யின் 16 கண் மதகு பகுதியில் விவசாயிகள் வழிபாடு செய்தனர். அணைக்கு ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

Tags:    

Similar News