செய்திகள்
கோப்புபடம்

வடகிழக்கு பருவமழை - உடுமலையில் பாலங்களை மேம்படுத்த வலியுறுத்தல்

Published On 2021-10-24 04:26 GMT   |   Update On 2021-10-24 04:26 GMT
ஆனைமலை, எரிசனம்பட்டி சாலைகளிலும் பல்வேறு ஓடைகளின் குறுக்கே முறையான பாலங்கள் கட்டப்படவில்லை.
உடுமலை:

உடுமலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மடத்துக்குளம் மற்றும் உடுமலை உட்கோட்ட பராமரிப்பில் பல்வேறு சாலைகளில் மிகச்சிறிய பாலங்கள் 1,045, சிறிய பாலங்கள் 63 பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

இதில் மாவட்ட முக்கிய சாலைகளான முக்கோணம் -ஆனைமலை, தளி- எரிசனம்பட்டி, உடுமலை -செஞ்சேரிமலை ஆகிய சாலைகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் நகரத்துடன் இணைக்கப்படுகின்றன. 

இந்த சாலைகளில் மழைக் காலங்களில் பல்வேறு ஓடைகளில் பெருக்கெடுக்கும் தண்ணீர் சாலையை கடந்து செல்ல போதிய பாலங்கள் இல்லாததால் போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

ஆனைமலை, எரிசனம்பட்டி சாலைகளிலும் பல்வேறு ஓடைகளின் குறுக்கே முறையான பாலங்கள் கட்டப்படவில்லை. மேலும் பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைப்பினை நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக தூர்வாருவதில்லை.

இதனால் மழைக் காலத்தில் பாலத்தின் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் ஆனைமலை சாலையில் பாப்பனூத்து சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதேபோல் பெரும்பாலான கிராம இணைப்பு சாலைகளிலும் தரை மட்ட பாலங்களில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உருவானது. செஞ்சேரிமலை சாலையில் வெள்ளியம்பாளையம் பிரிவு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் மாவட்ட முக்கிய சாலைகள், கிராம இணைப்பு  சாலைகளில் உள்ள பாலங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் வடிகால்களை தூர்வாரி சாலையில் மழை நீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News