செய்திகள்
கைது

மசாஜ் சென்டரில் விபசாரம்- 2 வாலிபர்கள் கைது

Update: 2021-10-22 07:06 GMT
மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல பல மாதங்களாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் தொற்று பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. முக்கியமாக கடற்கரைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நாட்களை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் கன்னியாகுமரிக்கு வந்து செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் பல மாதங்களுக்கு பிறகு தற்போது கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கி இருக்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் லாட்ஜூகள் மற்றும் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிச் செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரைகள், கடைவீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அனைத்து இடங்களிலும் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.

மேலும் லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் அடிக்கடி அதிரடி சோதனையில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அந்த மசாஜ் சென்டருக்கு போலீசார் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 இளம் பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். மற்றொருவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

அவர்கள் 2 பேரையும் வைத்து மசாஜ் சென்டர் பெயரில் அங்கு விபசாரம் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மசாஜ் சென்டரில் இருந்த ஊழியர்களான தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த தேவஆனந்த் (வயது27), கேரளாவை சேர்ந்த உதயலால்(29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். அவர்களை பெண்கள் காப்பகத்தில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News