செய்திகள்
மழை

குமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணை மூடல்

Published On 2021-10-21 11:14 GMT   |   Update On 2021-10-21 11:14 GMT
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் மதகுகள் வழியாக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக மழை கொட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது. மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது.

நேற்று காலையிலும் மாவட்டம் முழுவதும் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோ‌ஷண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று மாலையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இரவும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. நிலப்பாறையில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 24.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கோழிபோர் விளை, அடையாமடை, கொட்டாரம், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் மற்றும் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்ததால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் மதகுகள் வழியாக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. திற்பரப்பு அருவியிலும் ஆர்ப்பரித்து கொட்டி வந்த வெள்ளத்தின் அளவு சற்று குறைந்துள்ளது. தற்பொழுது சிறுவர் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் கொட்டி வருகிறது. அருவியில் இன்னும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் தொடர்ந்து அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.16 அடியாக இருந்தது. அணைக்கு 1043 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.43 அடியாக உள்ளது. அணைக்கு 1075 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.14 அடியாகவும் சிற்றார்-2 அணை நீர்மட்டம் 16.24 அடியாக உள்ளது. அணை நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

மழை சற்று குறைந்ததை அடுத்து தாழ்வான பகுதிகளில் சூழ்ந்திருந்த தண்ணீர் வடிந்து வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான முன்சிறை பகுதிகளில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்ததையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கிள்ளியூர், திருவட்டார், விளவங்கோடு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்கள் வாழை தோட்டங்களை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் தொடர்ந்து கவலையில் இருந்து வருகிறார்கள்.
Tags:    

Similar News