செய்திகள்
உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

ஐப்பசி பவுணர்மியையொட்டி திருப்பூர் மாவட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு

Published On 2021-10-21 07:40 GMT   |   Update On 2021-10-21 07:40 GMT
உடுமலை தில்லை நகரில் நூறாண்டு ஆண்டு பழமை வாய்ந்த ரத்தின லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்ட  சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள்திரளாக கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், அன்னாபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது.

உடுமலை தில்லைநகரில் ஆண்டு பழமை வாய்ந்த ரத்தின லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், ரத்தினாம்பிகை, அய்யப்பன், ஆழ்வார்கள், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவக்கிரகங்கள், அஷ்டதிக்நாகர்கள் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலில் மகா சிவராத்திரி, பவுர்ணமி, கிருத்திகை, கந்தசஷ்டி, பிரதோசம் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற அபிஷேகத்தை தரிசனம் செய்தால் உணவு பற்றாக்குறை ஏற்படாது என்பது ஐதீகம் அந்த வகையில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ரத்தின லிங்கேஸ்வரர் நந்தியம் பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அன்னம், காய்கறிகள், பழங்கள் அலங்காரத்தில் ரத்தின லிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்தினலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஆதி ஈஸ்வரர் கோவில், பல்லடம், பட்டேல் ரோடு அருளானந்த ஈஸ்வரர் கோவில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில், பொன்காளியம்மன் கோவில் உள்ளிட்ட சிவபெருமான் உள்ள கோவில்களில், அன்னாபிசேக சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த அன்னாபிசேக பூஜையில் சிவலிங்கத்திற்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், எலும்பிச்சை, சந்தனம், குங்குமம்,உள்பட 16 வகையான திரவியங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் அன்னத்தால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. 

இந்த சிறப்பு வழிபாட்டில், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு, சிவலிங்கத்தை வழிபட்டனர்.

போடிபட்டி காரிய சித்தி விநாயகர் கோவிலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரர்க்கு அன்னாபிஷேகத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும்அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News