செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான்- சசிகலாவுக்கு இங்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி

Published On 2021-10-20 08:54 GMT   |   Update On 2021-10-20 14:12 GMT
தி.மு.க.வின் 5 மாத கால ஆட்சியில் கமி‌ஷன், கலெக்‌ஷன், கரெப்‌ஷன் இதுதான் அவர்களது நோக்கம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், டி.ஜெயக்குமார். சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த
தி.மு.க.
தில்லுமுல்லு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்டு ஜனநாயக படுகொலை செய்து தேர்தலை நடத்தியது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பலரை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் அரசின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களும் முறையாக தேர்தல் பணியை கவனிக்கவில்லை. 9 மாவட்டங்களிலும் ஆங்காங்கே போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட கலெக்டர்களிடம் புகார் கொடுக்க சென்றபோது அவர்களை சந்திக்க முறையாக வாய்ப்பு கொடுக்கவில்லை.

உதாரணத்துக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 4,500 வாக்குகளுக்கு மேலாக அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ள சூழலில் அதை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதை தெரிவிப்பதற்காக கலெக்டரை சந்திக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார்கள். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை.

கிட்டத்தட்ட வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு 6 மணிநேரம் கழித்து தான் அதை அறிவித்தார்கள். ஆனால் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உடனுக்குடன் அறிவித்தார்கள்.

அதோடு அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்களை தோல்வி அடைந்தவர்களாக அறிவித்து இருக்கிறார்கள். இது பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.

இப்படி எங்கெங்கு முறைகேடு நடந்துள்ளது என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி விளக்கமாக கவர்னரிடம் மனுவாக கொடுத்திருக்கிறோம். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

இப்படி முறைகேடாக தேர்தல் நடைபெறும் என்று கருதிதான் அ.தி.மு.க. சார்பாக நீதிமன்றத்தை நாடினோம். இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்று முதலில் தேர்தல் ஆணையத்தை நாடினோம்.

ஆனால் தேர்தல் ஆணையம் நாங்கள் சொல்கின்ற கருத்தை காதில் வாங்கிக்கொள்ளாத காரணத்தால் நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிபதிகளும், நாங்கள் கேட்பது சரி என்று கருதி தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டது.

வாக்கு எண்ணும் மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவு செய்யும் இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. இந்த அரசாங்கமும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இதற்கு மாறாக ஆளுங்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற என்னென்ன யுக்திகளை கையாள முடியுமோ அத்தனையும், கையாண்டு அவர்களது கட்சியை சார்ந்தவர்களை வெற்றிபெற வைத்துள்ளனர்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் ஆலங்காயம் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினரே அந்த வாக்குப்பெட்டி வைத்திருந்த மையத்துக்கு சென்று வாக்குப்பெட்டியை எடுத்துவருகிற காட்சியை எல்லோரும் பார்க்க முடிந்தது.

ஆனால் இதில் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். வாக்குப்பெட்டியை எடுத்து வந்த எம்.எல்.ஏ. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படித்தான் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கேள்வி:- சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பற்றி கவர்னரிடம் ஏதும் கூறி இருக்கிறீர்களா?

பதில்:- சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பற்றி கவர்னரின் கவனத்துக்கு எடுத்து சொல்லி இருக்கிறோம். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு போக்குவரத்து காவலர் பணியில் இருக்கிறார். அப்போது அமைச்சரின் உதவியாளர் ஒருவர் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்தி இருக்கிறார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸ்காரர் அந்த வாகனத்தை எடுக்க வேண்டும் என்றார்.

உடனே அமைச்சரின் உதவியாளர் காரில் இருந்து இறங்கி வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரை கன்னத்தில் அடித்துள்ளார். மக்களை பாதுகாக்கக்கூடிய ஒரு காவலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை என்பதை எண்ணிப்பாருங்கள்.

இந்த வி‌ஷயத்தில் போக்குவரத்துக் காவலர் தனக்கு ஏற்பட்ட நிலையை புகாராக காவல் நிலையத்தில் பதிவு செய்கிறார். ஆனால் அவரை மிரட்டி அந்த புகாரை வாபஸ் பெறச்செய்கிறார்கள். அங்குள்ள போலீஸ் சூப்பிரண்டு நடைபெற்ற சம்பவம் உண்மை என்று கூறுகிறார்.

ஆனால் புகார் கொடுத்தவர் மனுவை திரும்ப பெற்றதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தவறு. புகார் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் காவலரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

கேள்வி:- அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறதே?

பதில்:- இது தி.மு.க.வின் 100 நாள் சாதனை. விலைவாசி உயர்ந்துள்ளது. அதில் முதல்வர் கவனம் செலுத்தவே இல்லை. இந்த 5 மாதகால ஆட்சியில் கமி‌ஷன், கலெக்‌ஷன், கரெப்‌ஷன் இது தான் அவர்களது நோக்கம். இதை சரியாக செய்கிறார்கள். விலைவாசி உயர்வே தி.மு.க.வின் சாதனை ஆகும்.

கேள்வி:- பொதுச்செயலாளர் என்ற பெயரில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதி இருக்கிறாரே? சசிகலா பற்றி நீங்கள் எதுவும் பேசவில்லையே?



பதில்:- அவர் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். அது பற்றி எங்களுக்கு என்ன? சூரியனை பார்த்து... யாருக்கு என்ன பயம்? ஓப்பனாக நான் சொல்லக்கூடாது.

ஏற்கனவே நீதிமன்றம் சொல்லிவிட்டது. தேர்தல் கமி‌ஷனும் சொல்லி விட்டது. தேர்தலும் முடிந்துவிட்டது நாங்கள் தான் என்று.

அவர் (சசிகலா) பொழுது போகாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் என்ன செய்வது. உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான். சசிகலாவுக்கு இங்கு இடம் இல்லை. அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கேள்வி:- மறப்போம் மன்னிப்போம் என்று சொல்கிறாரே?

பதில்:- அவர் சொல்லிவிட்டு போகட்டும். அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தெளிவாக பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. ஊடகங்கள் தான் அவரை பெரிது படுத்துகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News