செய்திகள்
கேஎஸ் அழகிரி

இந்தியாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2021-10-20 07:14 GMT   |   Update On 2021-10-20 07:14 GMT
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை எடை, குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படும் 2021-ம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இதில், பட்டினி அதிகரித்துள்ள 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தைப் பிடித்திருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அரசின் மெத்தனப் போக்கால் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் 8.9 சதவிகிதமும், வளர்ச்சி இன்றி உயரம் குறைவாக இருப்பது 9.6 சதவிகிதமும், வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது 4.8 சதவிகிதமும், குழந்தைகள் மத்தியில் ரத்த சோகை 11.7 சதவிகிதமும், பெண்கள் மத்தியில் ரத்த சோகை 13.8 சதவிகிதமும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 5 பெண்களில் ஒருவர் எடை குறைவாக உள்ளார். எடை குறைவாக குழந்தைகள் பிறப்பதற்கும் குறை பிரசவத்துக்கும் இதுவும் காரணம். குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதோடு, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News