செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி - அமைச்சர் தகவல்

Published On 2021-10-19 09:35 GMT   |   Update On 2021-10-19 09:35 GMT
கறவை மாடு, கன்று வளர்ப்பு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் அனைத்து விதமான விவசாய பயன்பாட்டுக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன.
தாராபுரம்:

தாராபுரத்தில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பயனாளிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தாராபுரம், காங்கயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன், விவசாய கடன் மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கி மூலம் பயனாளிகளுக்கு பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் வட்டியில்லா பயிர்க்கடன், தனி நபர் கடன் ஜாமீன் பெயரில் ரூ.1.60 லட்சமும், அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

அதேபோல கறவை மாடு, கன்று வளர்ப்பு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் அனைத்து விதமான விவசாய பயன்பாட்டுக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், துணை பதிவாளர் பழனி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News