செய்திகள்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

மிலாது நபி விழா: கவர்னர்-தலைவர்கள் வாழ்த்து

Published On 2021-10-18 11:02 GMT   |   Update On 2021-10-18 11:02 GMT
மிலாது நபி விழாவையொட்டி தமிழக கவர்னர் மற்றும் அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

மிலாது நபி விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

இறைதூதர் முகமதுநபியின் பிறப்பை நினைவு கூறும் வகையில் மிலாது நபியை கொண்டாடும் தமிழகத்தில் உள்ள குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தூதரின் முக்கிய செய்தி உலகளாவிய அமைதி மற்றும் சகோதரத்துவத்துக்கானது.

இந்த நல்ல தருணத்தில் அமைதியான, முற்போக்கான மற்றும் இணக்கமான இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

இஸ்லாமிய பெருமக்களின் திருமறையான திருக்குர்ஆன் நபிகள் நாயகம் மூலமாகத் தான் மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்களை நன்னெறிப்படுத்துகிற வகையில் திருமறை அமைந்துள்ளது.

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இருக்கிற கட்சிகள் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுத்து பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும் மிகமிக சோதனையான காலக்கட்டத்தில் சிறுபான்மை சமுதாயத்தினர் வாழ வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த கவலையைத் தருகிறது.

நபிகள் நாயகம் போதனைகளின்படி அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அவரது கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மிலாது நபி வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

நபிகள் நாயகத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரியத் தொண்டு அவர் வழி நடப்பது தான். நபிகள் நாயகம் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்றாலும் அவர் கற்பித்த போதனைகள் அனைவருக்கும் பொதுவானவை தான். கிறித்தவர்களின் பைபிளும், இந்துக்களின் பகவத் கீதையும் கூட இதே நன்னெறிகளைத் தான் கூறுகின்றன. இந்த போதனைகளை அனைத்து மக்களும் பின்பற்றி நடந்தால் உலகம் அமைதிக் கூடமாக மாறும்; உலகில் மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றைத் தவிர வேறு எதற்கும் வழியில்லாமல் போகும்.

இந்த உண்மையை உணர்ந்து உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

உலகிற்கு அருட்கொடையாக இறைவனால் அனுப்பப்பட்ட நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுன் நபியாக கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு “மீலாதுன் நபி” நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்திற்கு உருவாக்கிக் கொடுத்த, நபிகளின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, அமைதி நிறைந்து, சிறப்பான வாழ்வு வாழ்ந்திட எனது இதயப்பூர்வமான மீலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இதேபோல காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரும், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News