செய்திகள்
பாலாறு

பாலாற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு- புறநகர் பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு அதிகரிப்பு

Published On 2021-10-18 09:01 GMT   |   Update On 2021-10-18 09:01 GMT
பாலாறுடன் இணைந்துள்ள கால்வாய்கள் மூலம் கிராமப்பகுதி நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்வதால் ஏரி, குளங்கள் நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:

ஆந்திர மாநில பகுதிகள் மற்றும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் உள்ள சிறிய அளவிலான தடுப்பு அணைகள் நிரம்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஆற்றுப்படுகை முழுவதும் தண்ணீர் செல்லவில்லை. வாலாஜா அருகே உள்ள அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பாலாற்றின் 2 கரையோரங்களில் மட்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் பாலாற்றில் ஓடும் நீரால் கரையோர கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களில் நீரோட்டம் ஏற்பட்டு ஏரிகள் விரைவாக நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதுதவிர நீண்ட நாட்களுக்கு பிறகு கரையோரத்தில் மட்டுமே தண்ணீர் செல்வதால் கரையோர நீர்நிலைகள் அனைத்தும் நிரம்புவதோடு அதை ஒட்டிய கிராமப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து பாலாறு வடிநில கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

பாலாற்றில் முழுவதுமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தண்ணீர் வேகமாக அடித்து செல்லப்படும். தற்போது கரையோரத்தில் மட்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று அதிகாலை நிலவரப்படி 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.

நீரோட்டத்தால் ஆற்றுப்படுகையில் தண்ணீர் அதிகளவில் உறிஞ்சப்படும். இதன் மூலம் கரையோரங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்கும். மேலும் பாலாறுடன் இணைந்துள்ள கால்வாய்கள் மூலம் கிராமப்பகுதி நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்வதால் ஏரி, குளங்கள் நிரம்புவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர பழைய சீவரம் அருகே கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர்சுரப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News