செய்திகள்
கோப்புபடம்.

பயிர்களை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள்

Published On 2021-10-18 07:33 GMT   |   Update On 2021-10-18 07:33 GMT
மழைக்காலத்தில் ஈடுபொருள் செலவு அதிகம் இல்லாத பயிர் என்பதாக இருந்ததாலும், அடுத்த சில மாதங்களுக்கு கறவை மாடுகளுக்கு தீவனமாக மக்காச்சோள தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம், மேட்டுக்கடை, சடையபாளையம், எரகாம்பட்டி, மானூர்பாளையம், பெல்லம்பட்டி, பொன்னாபுரம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

மழைக் காலத்தில் ஈடுபொருள் செலவு அதிகம் இல்லாத பயிர் என்பதாக இருந்ததாலும், அடுத்த சில மாதங்களுக்கு கறவை மாடுகளுக்கு தீவனமாக மக்காச்சோள தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே நடப்பு பருவத்தில் பி.ஏ.பி., தண்ணீர்மற்றும் மழையை பயன்படுத்தி விதைப்பு செய்யப்பட்ட மக்காச்சோள பயிர் தற்போது ஒரு அடிக்கும் மேல் வளர்ந்த நிலையில் படைப்புழுக்களின் தாக்குதல் தொடங்கியுள்ளது.வழக்கமாக பவர் ஸ்பிரேயர் மூலம் விவசாயிகள் பூச்சி மருந்து தெளித்து வந்தனர். 

அப்போது பயிரின் குருத்துக்களில் பதுங்கியிருக்கும் புழுக்கள் மேல் மருந்து படாததால் அவைகள் தப்பி மீண்டும் பயிரைத் தாக்குகின்றன. ஆனால் ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்கும்போது குருத்தில் மருந்து செல்வதால் படைப்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, தாராபுரம் பகுதியில் டிரோன் மூலமாகவே மக்காச்சோள பயிருக்கு பூச்சி மருந்துகளை தெளித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பவர் ஸ்பிரேயருக்கு பதிலாக ட்ரோன்களை இந்த ஆண்டுதான் பயன்படுத்தியுள்ளோம். பவர் ஸ்பிரேயரில் ஒரு ஏக்கருக்கு 12 லிட்டர் கொண்ட 10 டேங்க் மருந்து தெளிப்போம். ட்ரோனில் ஏக்கருக்கு 11 லிட்டர் கொண்ட ஒரே ஒரு டேங்க் மருந்து மட்டுமே போதுமானதாக உள்ளது. அதே வேளையில் பூச்சி மருந்து மட்டும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.ட்ரோனில் ஒரு டேங்க் மருந்து தெளிக்க வாடகையாக ரூ. 500 வசூலிக்கின்றனர். 

ஆகவே 5 ஏக்கர் பரப்புக்கு மருந்து தெளிக்க ரூ. 2,500 செலவாகிறது. எனினும், தெளிப்புப் பணி விரைவாக முடிவதுடன் படைப்புழுக்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றார்.

மேலும்  தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் முருங்கையை தாக்கும் புழுக்கள், வண்டுகளை கட்டுப்படுத்தி அழிக்கும் முறைகள் குறித்து தோட்டக்கலைத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து குண்டடம் தோட்டக்கலை உதவி இயக்குநர் மோகனா கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தற்போது முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருமாத காலமாகவே முருங்கைச்செடிகளை வண்டுகள் தாக்கி மகசூலை குறைத்து வருகின்றது. இது தொடர்பாக முத்தணம்பட்டி பகுதியில் முருங்கை சாகுபடி செய்யப்பட்ட வயலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முருங்கையில் வெள்ளைப்புழுக்கள் மற்றும் வண்டுகள் தாக்குதல் ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மழைக் காலங்களில் இருக்கும். மேலும் வேர்கள், காய்களை உண்டு சேதத்தை ஏற்படுத்தும் வண்டுகள் பகல் நேரத்தில் கண்களுக்கு தென்படாது. 

இரவு நேரங்களில் மண்ணிலிருந்து வெளிவந்து முருங்கை செடிகளை தாக்கும். முருங்கையை தாக்கும் புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்திலும், ஆங்கில எழுத்து சி வடிவிலும், வண்டுகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 1மின்விளக்கு பொறி வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். 

வேப்ப மரக்கிளையை வெட்டி வயலின் நடுவில் வைப்பதன் மூலம் தாய் வண்டுகளை அழிக்கலாம். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கை மண்ணில் இடலாம். குளோரொபைரிபாஸ் 10 லிட்டர் தண்ணீரில் 20மில்லி லிட்டர் கலந்து தெளிக்கலாம். கார்போபியூரான் ஏக்கருக்கு 13 கிலோ அல்லது போரோட் ஏக்கருக்கு 10 கிலோ போன்ற குருணை மருந்துகளை மண்ணில் கலந்து விடுவதன் மூலமும் வெள்ளைப் புழுக்களை அழிக்கலாம்.

மேலும் காய்க்கும் நிலையில் இருக்கும் முருங்கைப் பயிருக்கு நிமாஜால் லிட்டருக்கு 5 மி.லி., நீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து 3 நாள்களுக்கு ஒருமுறை தெளிப்பதன் மூலம் வண்டுகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ஆகவே குண்டடம் வட்டாரத்தில் முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த முறைகளை கடைப்பிடித்து வண்டுகள், புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News