செய்திகள்
பாபநாசம் அணை

பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்வு

Published On 2021-10-18 05:01 GMT   |   Update On 2021-10-18 05:04 GMT
மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,248 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 76.20 அடியாக உள்ளது.
நெல்லை:

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. நேற்று நகர்புறங்களில் மழை குறைந்தது.

ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

செங்கோட்டை மலையில் உள்ள அடவி நயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக இன்று காலை வரை 118 மில்லி மீட்டர் மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 36 மில்லி மீட்டரும், செங்கோட்டை நகர பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

தென்காசி-19.4, ஆய்க்குடி-18, கடனாநதி-15, பாபநாசம்-15, சேர்வலாறு-6, கருப்பாநதி-6, சங்கரன் கோவில்-5, சேரன் மகாதேவி-1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் மட்டும் 3 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று பாபநாசம் அணையில் ஒரே நாளில் 23 அடி நீர்மட்டம் உயர்ந்தது.

இன்று காலை பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6,530 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்று 131.30 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் மேலும் 5 அடி உயர்ந்து இன்று காலை 136.40 அடியானது.

பாபநாசம் அணை நிரம்ப இன்னும் 7 அடி தண்ணீர் மட்டுமே தேவை. எனவே பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 2,989 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்றைவிட சற்று உயர்ந்து இன்று காலை 148.06 அடியாக உள்ளது. இந்த அணை நிரம்ப இன்னும் 8 அடி மட்டுமே நீர்மட்டம் தேவை.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,248 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 76.20 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

கடனா நதிக்கு வினாடிக்கு 329 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 81.90 அடியாக உள்ளது.

ராமநதி அணை நீர்மட்டம் நேற்றை விட 3 அடி உயர்ந்து 72.59 அடியாக உள்ளது. கருப்பாநதி நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து இன்று 63.98 அடியாக உள்ளது.

செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணை, குண்டாறு அணை ஆகியவை முழு கொள்ளவை எட்டி தொடர்ந்து நிரம்பி வழிகிறது. களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணையின் நீர்ட்டமும் இன்று காலை 50.50 அடியாக உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளது.

தற்போது நெல்லை மாவட்டத்தில் வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு மட்டும் தண்ணீர் வரத்து இல்லை.

இதனால் வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 16.65 அடியிலும், நம்பியாறு நீர்மட்டம் 10.36 அடியிலும் தொடர்ந்து உள்ளது.

பலத்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று 3-வது நாளாக தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பகுதியில் அருவிக்கு அருகே செல்ல முடியாத வகையில் தண்ணீர் கொட்டுவதால், அந்த பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News