செய்திகள்
கோப்புபடம்.

தயாரிப்பு செலவு அதிகரிப்பால் பாலிபேக் விலையை 35 சதவீதம் உயர்த்த திருப்பூர் உற்பத்தி நிறுவனங்கள் முடிவு

Published On 2021-10-17 07:50 GMT   |   Update On 2021-10-17 07:50 GMT
திருப்பூர் ராம்நகரில் உள்ள சங்க அரங்கில் நாளை 18-ந்தேதி காலை 11 மணிக்கு டிப்மா சங்க செயற்குழு கூட்டம் நடக்கிறது.
திருப்பூர்:

கொரோனாவுக்கு பின் பாலிபேக் உற்பத்தி மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. மூலப்பொருள் தட்டுப்பாடும் ஏற்படுவதால்  திருப்பூர் பாலிபேக் உற்பத்தி நிறுவனங்கள் தவிக்கின்றன. 

இதுகுறித்து திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க (டிப்மா) தலைவர் சண்முகம் கூறியதாவது:-

திருப்பூர் பாலிபேக் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்து, பாலி புரொப்லின், பாலி எத்திலீன் மூலப்பொருட்களை கொள்முதல் செய்கின்றன. கடந்த 4 மாதங்களில், மூலப்பொருட்கள் விலை 35 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. 

இதனால் திருப்பூர் நிறுவனங்களில் பாலிபேக் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. தொகையை செலுத்தினாலும் மூலப்பொருட்கள் உடனடியாக கிடைப்ப தில்லை. ஒருவாரத்துக்குமேல் காத்திருக்க வேண்டியுள்ளது. மூலப்பொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதால் திட்டமிட்டபடி பாலிபேக் தயாரிக்க முடிவதும் இல்லை.

நெருக்கடியான இந்த சூழலில் பாலிபேக் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மூலப்பொருள் விலை உயர்வுக்கு ஏற்ப 35 சதவீதம் பாலிபேக் விலையை உயர்த்தப்பட உள்ளது.  

திருப்பூர் ராம்நகரில் உள்ள சங்க அரங்கில் நாளை 18 - ந்தேதி காலை 11 மணிக்கு டிப்மா சங்க செயற்குழு கூட்டம்  நடக்கிறது. இதில் ஆலோசனை நடத்தி பாலிபேக் விலை உயர்வு அறிவிக்கப்படும். தவிர்க்க முடியாத விலை உயர்வுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி துறையினர் கை கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News