செய்திகள்
பொதுமக்களிடம் தாசில்தார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.

தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2021-10-16 12:05 GMT   |   Update On 2021-10-16 12:05 GMT
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விழுப்புரம்:

திண்டிவனம் தாலுகா பெரியதச்சூர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரியதச்சூர் காலனி பகுதியை தனி கிராம ஊராட்சியாக அறிவிக்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பின்னர் விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், பெரியதச்சூர் காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டதில் எங்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவி (தனி பொது) பட்டியலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை சகித்துக்கொள்ள முடியாத மாற்று சமூகத்தினர் திட்டமிட்டு எந்தவித அதிகாரமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சென்று விடக்கூடாது என்று கருதி வேறொரு சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச்செய்து அதிகாரத்தை அவர்களே தக்க வைத்துக்கொண்டனர்.

இனியும் நாங்கள் மேற்கண்ட கிராம ஊராட்சியில் தொடர எங்களுக்கு துளியளவும் விருப்பம் இல்லை. பல வருடங்களாக பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே கிராம நல்லுறவை பேணிக்காக்க நாங்கள் வசிக்கும் பகுதியை தனி கிராம ஊராட்சியாக அறிவித்து எங்களையும் உள்ளாட்சி அதிகாரத்தில் இடம்பெற செய்யுமாறு முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News