செய்திகள்
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமை - திருப்பூர் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2021-10-16 11:09 GMT   |   Update On 2021-10-16 11:09 GMT
பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பூர்:

கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் தரிசனம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

 திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில், ஊத்துக்குளி ரோடு தென்திருப்பதி கோவில்,  உடுமலை திருவேங்கடநாத சுவாமி கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.  

பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. கடந்த ஆண்டை போன்று கொரோனா தடுப்பு விதிகளின்படி பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தரிசனத்திற்கு நின்ற பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்க அறிவுறுத்தப்பட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கோவில்களுக்கு சென்று கொரோனா தடுப்பு விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்தனர். கோவில் நிர்வாகங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை எடுத்துக் கூறினர். 

புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபட தடை விதிக்கப்பட்டதால் பெருமாள் கோவில்கள் பக்தர்கள் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது. தற்போது அனுமதி அளிக்கப்பட்டதால் புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் கோவில்கள் களை கட்டின. 

மேலும் பூஜை பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்தது. திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். 

புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் பலரும் துளசி வாங்கி சுவாமிக்கு அணிவித்தனர். இதனால் திருப்பூர் மார்க்கெட்டில் துளசிக்கும் கடும் கிராக்கி நிலவியது. துளசி ஒரு கட் வழக்கமாக,10 ரூபாய்க்கு விற்கும் நிலையில் இன்று ஒரு கட்டு ரூ.25க்கு விற்றது. 

உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News