செய்திகள்
உயிரிழப்பு

வடவள்ளியில் சிறுமி திடீர் உயிரிழப்பு- போலீசார் விசாரணை

Published On 2021-10-16 09:52 GMT   |   Update On 2021-10-16 09:52 GMT
வடவள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்ததையடுத்து, போலீசார் போலீஸ் நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுத்து விட்டு சிறுமியை அடக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தினர்.
வடவள்ளி:

அசாம் மாநிலம் நேகவ் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (33). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஹர்தீனா கத்தூம் என்ற 4 வயதில் மகள் உள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக கோவை தொண்டாமுத்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே அப்துல் ரஹீம்மின் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. ஆஸ்பத்திரியில் காண்பித்தும் சரியாகவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஹர்தீனா கத்தூம் மயங்கி விழுந்தார். பெற்றோர் அவரை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர்.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் நாங்கள் ஏற்கனவே கொடுத்து விட்டோம் என்றனர்.

இதையடுத்து போலீசார் போலீஸ் நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுத்து விட்டு சிறுமியை அடக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி சிறுமியின் பெற்றோர் கடிதம் எழுதி கொடுத்தனர். அதன்பின்னர் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News