செய்திகள்
டெங்கு கொசு

மழை காலம் தொடங்கி உள்ளதால் 1,200 குக்கிராமங்களில் டெங்கு பரவல் தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-10-16 05:44 GMT   |   Update On 2021-10-16 05:44 GMT
டெங்கு பரவலை தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் 20 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 228 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 1,200 குக்கிராமங்கள் உள்ளன. பொதுவாக கோவையில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகமாக இருக்கும். ஆண்டு முழுவதும் டெங்கு பரவல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், டெங்கு பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

இதன்படி ஊராட்சி பகுதிகளில் பிரத்யேக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பருவமழை காலம் தொடங்கியதை தொடர்ந்து சாக்கடைகள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஊராட்சி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

கிராம ஊராட்சிகளில் அங்குள்ள தூய்மை பணியாளர்கள் மூலம் சாலையை சுத்தப்படுத்துதல், சாக்கடைகளை தூர்வாருதல், தேங்கி உள்ள குப்பைகளை அகற்றுதல் போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் டெங்கு பரவலை தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் 20 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு மஸ்தூர்கள் எனப்படும் இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு சென்று கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் காணப்படும் தண்ணீர் தேங்கும் இளநீர் கூடு, டயர் போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றுதல், நன்னீரில் நோய் தடுப்பு மருந்தை கலத்தல், கொசு மருந்து தெளித்தல் போன்ற பணிகளை தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஊராட்சி பகுதிகளில் 1,233 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோர சாக்கடைகள் உள்ளன. மழைக்காலம் தொடங்கி உள்ளதால் இலை, குப்பை சாக்கடையில் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு, மழை பெய்யும் சமயங்களில் கழிவுநீர் செல்வதில் இடையூறு ஏற்படாமல் இருப்பதை தடுக்க அவரை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணியும் விரைவில் முடிக்கப்படும். மேலும் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணி, வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News