செய்திகள்
பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

குமரி மாவட்ட கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி- நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு

Published On 2021-10-15 09:26 GMT   |   Update On 2021-10-15 09:26 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவில், அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகர்கோவில்:

நவராத்திரி விழாவில் முப்பெரும் தேவிகளின் பூஜைகள் முடிந்தபின் வரக்கூடிய 10-வது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொடங்கப்படும் எந்த ஒரு செயலும் வெற்றியாகும் என்பது மக்களின் ஐதீகமாகும்.

அதிலும் குழந்தைகள் கல்வியை தொடங்குவதற்கு விஜயதசமி நாள் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் விஜயதசமி நாளில் ஏராளமானோர் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பார்கள். மேலும் கோவில்களில் நடக்கும் திருஏடு தொடங்கும் நிகழ்ச்சியான வித்யாரம்பத்தில் பங்கேற்க வைப்பார்கள்.

அப்போது குழந்தைகளை விரல்களால் நெல் மணிகளில் எழுத வைப்பார்கள். விஜயதசமி நாளான இன்று கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்ட கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடந்தது.

அதிலும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் தங்களின் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். மன்னர் ஆட்சிக்கு பின் பத்மனாபபுரம் அரண்மனை கேரள மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் விஜய தசமியன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றன.

தேவி சன்னதியில் வைத்து தங்கத்தினால் ஆன எழுத்தாணியால் குழந்தைகளின் நாக்கில் எழுத்தின் வடிவங்களை எழுதியும், தாம்பாள தட்டில் உள்ள அரிசியில் குழந்தைகளின் விரல்களால் “அ’’ உள்ளிட்ட எழுத்து வடிவங்களை எழுதியும் ஓய்வுபெற்ற பேராசிரியர் சங்கரநாராயண பிள்ளை, பேராசிரியர் அய்யப்பன், ஆசிரியர் ரகுராமன் ஆகியோர் குழந்தைகளில் கல்வியறிவை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை வழிகாட்டுதலின்படி, தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் கோயில் டிரஸ்ட் தலைவர் பாலன் தலைமையில் செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் மணி, விஷ்ணு மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.

இதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவில், அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெகுநாட்களுக்கு பிறகு வழக்கம்போல் கோவிலுக்கு விஜயதசமி நாளான இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதனால் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Tags:    

Similar News