செய்திகள்
கோப்புபடம்

பள்ளி மாணவர்களின் குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

Published On 2021-10-13 06:58 GMT   |   Update On 2021-10-13 06:58 GMT
பள்ளி திறப்பன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்களா? போன்ற விவரங்களை படிவம் மூலமாக திரட்டும் பணியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
திருப்பூர்:

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களது குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா? எத்தனை டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர், பள்ளி திறப்பன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்களா? போன்ற விவரங்களை படிவம் மூலமாக திரட்டும் பணியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

அப்படிவத்தில்,நவம்பர் 1-ந்தேதிஅன்று பள்ளி மீண்டும் திறக்கப்படும்போது என் மகன்-மகள் பள்ளிக்கு அனுப்ப நான் முழு விருப்பத்துடன் ஒப்புதல் அளிக்கிறேன். என் மகன்- மகள் நலமாக இருக்கிறார்.நான் கோவிட் - 19 தொற்று நோயை பற்றி முழுமையாக அறிந்திருக்கிறேன். 

மேலும் எனது மகனை - மகளை பள்ளிக்கு அனுப்பும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனக்கு முழுமையாக தெரியும். எனது குடும்பத்தில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளோம் அல்லது இல்லை.

மேலும் தொற்றுநோய் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் நான் முழுமையாக பின்பற்றுவேன் என இடம் பெற்றுள்ளது.

இதனை பெற்றோர்கள் நன்றாக படித்து பார்க்க சொல்லி, படிக்க தெரியாதவர்களுக்கு வாசித்து காட்டி அவர்களது கையொப்பத்தை பெற்றுக் கொள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.  
Tags:    

Similar News