செய்திகள்
கார்த்திக்

இதுவே வெற்றிதான்- விளக்கம் அளித்த ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்

Published On 2021-10-13 06:45 GMT   |   Update On 2021-10-13 08:52 GMT
மீம்ஸ்களை பற்றி கவலை இல்லை, ஒரு ஓட்டு பெற்றதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன் என பா.ஜ.க. வேட்பாளர் கார்த்திக் கூறியுள்ளார்.
கவுண்டம்பாளையம்:

தேர்தலில் இத்தனை ஆயிரம் ஒட்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம். இவ்வளவு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து நின்றவரை தோற்கடித்துள்ளோம் என்பதை தான் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கி, அதிலும் சாதனை படைத்து, இந்திய அளவில் டிரெண்டிங்காக மாறியிருக்கிறார் வேட்பாளர் ஒருவர்.

கோவை குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.கவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டை மட்டுமே பெற்றுள்ளார்.

இதற்கிடையே ஒரே ஒரு வாக்குபெற்ற கார்த்திக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆக தொடங்கினார். சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இவரது ஒத்த ஓட்டு பற்றிய தகவல்கள் பரவி கிடந்தன. அதில் ஒத்த ஓட்டு பெற்ற பா.ஜனதா வேட்பாளர், குடும்பத்தில் 5 பேர் இருந்தும் ஒரு வாக்கு பெற்ற பா.ஜனதா வேட்பாளர், குடும்ப உறுப்பினர்களே அவருக்கு வாக்களிக்கவில்லை என்ற வாசகங்களுடன் அடங்கிய மீம்ஸ்கள் சமூக வலைதளத்தை நேற்று முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.

இதுதவிர சிலர் சமூக வலைதளங்களில் ஒத்த ஓட்டு பா.ஜ.க என்று ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கினர். இந்த ஹேஷ்டேக் நேற்று முழுவதும் டிரெண்ட் ஆகி முதல் இடத்தை பிடித்தது. இதேபோல் சிங்கிள் ஓட்டு பி.ஜே.பி என்ற ஹேஷ்டேக்கும் வேகமாக டிரெண்டிங்காகி 3-வது இடத்தில் இருந்தது. நேற்று இந்தியா முழுவதுமே இந்த ஒத்த ஓட்டு பற்றிய பேச்சுதான் எங்கு பார்த்தாலும் பரவி இருந்தது.

பல மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களிலும் ஒத்த ஓட்டு பி.ஜே.பி என்று பதிவிட்டு, கலாய்த்து வருகின்றனர்.



இதற்கிடையே ஒரு ஓட்டு பெற்ற கார்த்திக்கு
பா.ஜ.க
மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கட்சிக்காக ஆற்றிய பணிகள், அவரது செயல்பாடுகள் அனைத்தையும் அறிந்து வருங்காலத்தில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பா.ஜ.க பிரமுகர் கார்த்திக் கூறியதாவது:-

நான் பா.ஜனதாவில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறேன். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க உள்ளதால் கட்சி சார்பில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இருப்பினும் நான் சுயேட்சையாக கார் சின்னத்திலேயே போட்டியிட்டேன்.

நான் 4-வது வார்டை சேர்ந்தவன். எனக்கு மற்றும் எனது குடும்பத்தினருக்கு 4-வது வார்டில் ஓட்டு உள்ளது. தற்போது தேர்தல் நடந்தது 9 வார்டில் தான். ஆனால் சிலர் வீட்டில் 5 பேர் இருந்தும் ஒரு ஓட்டு தான் வாங்கியிருக்கிறார் என்ற தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். எனக்கும், இந்த வார்டுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

இங்குள்ள பொதுமக்களுக்கு நான் யார் என்று தெரியாது. அவர்களுடன் எனக்கு பரிட்சயமும் கிடையாது. ஆனால் புதிய தொகுதி என்பதாலும், அறிமுகம் இல்லாததாலும் நான் தோற்றுவிட்டேன். கிடைத்த ஒரு வாக்கையும் நான் மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன். இதனை சந்தோ‌ஷமாக ஏற்று கொள்கிறேன். என்னை பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் மீம்ஸ்களை பற்றி கவலைப்படவில்லை. அது எனக்கு உத்வேகத்தையே கொடுக்கிறது.

அடுத்த முறை நான் வசிக்க கூடிய 4-வது வார்டில் போட்டியிடுவேன். அங்கு தீவிரமாக வேலை செய்து, மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று, கட்சிக்கு பெருமை சேர்ப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News