செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கவர்னர் ஆர்.என்.ரவி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்

Published On 2021-10-13 06:20 GMT   |   Update On 2021-10-13 07:06 GMT
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து கவர்னரிடம் விளக்கி கூறி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தர மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.
சென்னை:

தமிழ்நாட்டில் நீட் தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக்கனியாகி விடுவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில்
நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் தந்த அறிக்கையை சுட்டிக்காட்டி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வகையில் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார்.



அப்போது சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கி கூறி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தர வலியுறுத்த உள்ளார்.

நீட் தேர்வு விலக்கிற்கு ஆதரவு தர வேண்டும் என்று ஏற்கனவே 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் கவர்னர் ரவியை சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Tags:    

Similar News