செய்திகள்
கொள்ளை நடந்த செல்போன் கடையை காணலாம்

அடுத்தடுத்து 2 கடைகளில் கைவரிசை- ரூ.4½ லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை

Published On 2021-10-13 06:03 GMT   |   Update On 2021-10-13 06:03 GMT
குளச்சலில் அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல்:

குளச்சல் சாஸ்தான் கரையைச் சேர்ந்தவர் பக்ரூதின் (வயது 36).

இவர், குளச்சல் பீச் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்றிரவு பக்ரூதின் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை அவரது செல்போன் கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருப்பதாக அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

உடனே பக்ரூதின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.4½ லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கடையில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

மற்றொரு சம்பவம்...

குளச்சல் அருகே இரும்புலி ரீத்தாபுரம் பகுதியில் ஜெனிஷ் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையையும் நேற்றிரவு மர்மநபர்கள் உடைத்து செல்போனை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த 2 கொள்ளை சம்பவத்திலும் ஒரே கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



Tags:    

Similar News